CINEMA
ஜூன் 11 காலை 9.30 மணிக்கு என்ன நடக்கப்போகிறது…அரசியல் வருகையா? புதிய பட அறிவிப்பா?…திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்..! முதல்வர் விஜய் எடுத்த முடிவால் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிக்கை…!
தமிழக அரசியல் களத்தில் தற்போது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த விவாதங்கள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள இத்தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் இங்கு போட்டியிடப் போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அல்லது பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் தீவிரமாக அடிபடத் தொடங்கின.
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக காட்டுத்தீ போல பரவி வந்த வதந்திகளுக்கு ராகவா லாரன்ஸ் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் நான் போட்டியிடுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து பலரும் என்னை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கின்றனர்; இது தொடர்பான வதந்திகள் மற்றும் ஊகங்கள் தற்போது ஒரு எல்லையைத் தாண்டிவிட்டன” என்று மௌனம் கலைத்துக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த குழப்பங்களுக்கு அவர் தற்காலிகமாகப் புள்ளி வைத்துள்ளார்.
தற்போது லாரன்ஸ், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும், அந்தப் பணிகள் வரும் ஜூன் 10-ஆம் தேதியுடன் முழுமையாக நிறைவடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜூன் 11-ஆம் தேதி காலை 9.30 மணிக்குத் தனது தாயாரின் ஆசியுடன், தனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போவதாக அவர் குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார். லாரன்ஸின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வருகை சார்ந்ததா, சமூக சேவை சார்ந்ததா அல்லது புதிய திரைப்பட அறிவிப்பா எனத் தெரியாமல் ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் தற்போது பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
