CINEMA
வாரிசு நடிகர்களுக்கு கிளம்பிய எதிர்ப்பு…மருமகனுக்காக விளம்பரம் செய்த மாமனார்…புதிய படங்களை தியேட்டர்ல போய் பாருங்க…சுதீப்பின் ஆக்ரோஷ பேச்சு… சிவராஜ்குமார் கொடுத்த ‘அந்த’ ஒரு கூலான பதில்…செம்ம மாஸ்…!
கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப்பின் மருமகன் சஞ்சித் சஞ்சீவ், ‘மேங்கோ பச்சா’ (Mango Pacha) திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். தன் குடும்பப் பிள்ளை என்பதால் சுதீப்பும் இப்படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால், இதனைப் பார்த்த நெட்டிசன்கள் “சினிமாவிலும் வாரிசு அரசியலா?” என்று சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பினர். இந்த விவகாரம் பூதாகரமாவதை உணர்ந்த சுதீப், செய்தியாளர் சந்திப்பில், “டாக்டர் ராஜ்குமாரின் பிள்ளைகள் எல்லாரும் சினிமாவுக்கு வந்தபோது ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை? திரையுலகில் வாரிசாக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும்” என்று சற்று ஆக்ரோஷமாகப் பேச, இந்த கமெண்ட் இணையத்தில் தீயாய் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சுதீப்பின் இந்த ‘ராஜ்குமார் குடும்ப’ கமெண்ட்டுக்கு, டாக்டர் ராஜ்குமாரின் மூத்த மகனும், கன்னட திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான சிவராஜ்குமார் செம்ம மாஸாகவும் பக்குவமாகவும் பதிலடி கொடுத்துள்ளார். வாரிசு அரசியலை மட்டுமே பிடித்துக்கொண்டு விமர்சிப்பவர்களுக்குப் புரிய வைக்கும் விதமாகப் பேசிய அவர், “இங்கே கனவு காண்பதற்கு எல்லாருக்குமே முழு உரிமை இருக்கிறது. தங்களது திறமையை நிரூபிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பு தேவைப்படுகிறது. இதனை வெறும் வாரிசு அரசியலாக மட்டும் பார்க்கக் கூடாது; தனிநபரின் திறமைக்குத்தான் நாம் எப்போதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்று மிகவும் முதிர்ச்சியோடு தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
மேலும் திரைத்துறையின் வளர்ச்சி குறித்து உருக்கமாகப் பேசிய சிவராஜ்குமார், “சினிமாவுக்குப் புதுப்புது திறமையாளர்கள் அதிகமாக வர வேண்டும். ஒரு புதிய நடிகர் உள்ளே வரும்போது அவரை மட்டுமே நம்பி படம் உருவாவதில்லை; ஒரு இயக்குநரில் இருந்து கேமராமேன் வரை பல நூறு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே நமது மொழி வளர வேண்டும் எனில், புதியவர்களின் படங்களைத் தியேட்டருக்குச் சென்று மக்கள் ஆதரிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே சுதீப், சஞ்சித்திற்கு நடிப்பின் மீது அக்மார்க் ஆர்வம் இருந்ததால் மட்டுமே இந்த வாய்ப்பு கிடைத்தது என்று தெளிவுபடுத்தியிருந்த நிலையில், இந்த வாரிசு விவாதத்திற்குப் பெரிய மனுஷ தோரணையில் சிவராஜ்குமார் கொடுத்துள்ள கூலான பதில் தற்போது தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது.
