LATEST NEWS
“வேண்டும் என்றே பியூஸ் கேரியர்களை பிடுங்குகிறார்கள்…” உடனே வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்… காரணமே அவங்க தான்… மின்தடை புகார்களுக்கு மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி விளக்கம்…!!
தமிழகத்தில் அண்மையில் ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய அரசின் கீழ், சென்னையின் மேடவாக்கம், ஜல்லடியன்பேட்டை, அரும்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நள்ளிரவில் தொடர்ச்சியான மின் தடை ஏற்பட்டு வருகிறது. நேற்றிரவு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் நிலவிய உஷ்ணம் காரணமாக, முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்படப் பொதுமக்கள் அனைவரும் தூக்கத்தைத் தொலைத்துக் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனால் பொறுமையிழந்த மக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகளும் காவல் துறையினரும் அவர்களைச் சமாதானப்படுத்தினர். இந்தத் தொடர் மின்வெட்டு மற்றும் நள்ளிரவுப் போராட்டங்கள் குறித்துப் புதிய மின் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், சில சமூக விரோதிகள் திட்டமிட்டே மின் விநியோகப் பெட்டிகளில் உள்ள பியூஸ் கேரியர்களை பிடுங்கி வேண்டுமென்றே மின் தடையை உருவாக்கி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ‘உடனே சாலையில் திரண்டு போராடுங்கள்’ என்று ஒரு சில கும்பல் பொதுமக்களைத் தூண்டிவிட்டு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி பதற்றத்தை உருவாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சதிச் செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்கக் கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV) உள்ள இடங்களில் சிலரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும், மற்ற இடங்களைக் கண்காணிக்கப் பொதுமக்கள் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிச் சந்தேக நபர்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
