LATEST NEWS
திமுக கோட்டையைச் சாய்த்த தவெக…கோட் சூட்டில் இறங்கி வந்த முதலமைச்சர் விஜய்… நீலாங்கரையில் நடுரோட்டில் இளைஞர்களுடன் செய்த ‘அந்த’ மாஸ் காரியம்…முதலமைச்சராக விஜய் கொண்டாடும் 52-வது பிறந்தநாளின் மாஸ் அப்டேட்…!
திரையுலகில் இருந்து அரசியல் களம் புகுந்து, தங்களின் முதல் தேர்தலிலேயே ஆளுங்கட்சியான திமுகவையே வீழ்த்தி தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார் தவெக தலைவர் விஜய். இன்று தலைமைச் செயலகத்திற்குச் செல்வதற்காக அவர் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து கோட் சூட் உடையில் கம்பீரமாகக் கிளம்பினார். அப்போது, தங்களின் புதிய முதலமைச்சரை எப்படியாவது ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என அதிகாலை முதலே அவரது வீட்டின் அருகே ஏராளமான பொதுமக்களும் ரசிகர்களும் குவிந்திருந்தனர். காரில் ஏறி அப்படியே கிளம்பிவிடாமல், காரில் இருந்து கீழே இறங்கி வந்து தன்னைக்காணக் காத்திருந்த மக்களை விஜய் நேரில் சந்தித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன.
அங்கு திரண்டிருந்த ரசிகர்களைச் சந்தித்தபோது ஒரு சுவாரசியமான சம்பவமும் அரங்கேறியது. ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் கைகளை மடக்கி மோதிக்கொள்ளும் போஸ் (Pose) மிகவும் பிரபலமானது. அங்கு நின்றிருந்த சில இளைஞர்கள் முதலமைச்சர் விஜய்யைப் பார்த்ததும் அதே மாஸ்டர் போஸைச் செய்து காட்டினர். உடனே எவ்வித பந்தாவும் இன்றி அதே எளிமையுடன் அந்த இளைஞர்களோடு கைகளை மடக்கி விளையாடிவிட்டு, பின்னர் அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் விஜய். முதலமைச்சராக உயர்ந்த பின்னரும், எப்போதும் போல அதே அன்புடனும் எளிமையுடனும் அவர் மக்களை அணுகும் இந்த வீடியோவை தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் இணையத்தில் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
மறுபுறம், வரும் ஜூன் 22ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. 1974 ஜூன் 22 அன்று இயக்குநர் சந்திரசேகர் – பாடகி சோபா தம்பதியருக்கு மகனாகப் பிறந்த விஜய்யின் அரசியல் வெற்றிக்கு, பெண்களின் வாக்குகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. சிறு வயதிலேயே தனது தங்கை வித்யாவை இழந்த விஜய், தன்னை ‘அண்ணா’ என அழைக்கும் பெண் ரசிகைகளைத் தன் சொந்தத் தங்கைகளாகவே பாவித்து வருகிறார். இதனாலேயே இளம் பெண்கள் மற்றும் தாய்மார்களின் பேராதரவு ஒட்டுமொத்தமாக இவருக்குக் கிடைத்தது. இந்த ஆண்டு முதலமைச்சராகத் தனது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் விஜய், அன்றைய தினம் மக்களுக்குப் பயன்தரும் இனிப்பான அறிவிப்புகளையும், ரசிகர்களுக்கு அவரது ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பையும் வெளியிடுவார் எனப் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
