LATEST NEWS
எல்லை மீறிய அமெரிக்கா.. ஈரானின் அணுமின் நிலைய அஸ்திவாரத்தை உலுக்கிய குண்டுகள்.. ஸ்தம்பித்த சர்வதேச நாடுகள்.!!
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த மூன்று தினங்களாக இரு நாட்டுப் படைகளும் தீவிரமான மோதலில் ஈடுபட்டு வருகின்றன. சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் பயணிக்கும் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்துவதே, அமெரிக்கா இந்த ராணுவ நடவடிக்கையைத் தொடங்கக் காரணம் என்று கூறப்படுகிறது. ஒப்பந்தம் ரத்தான அடுத்த 48 மணி நேரத்திற்குள், ஈரானின் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள 170-க்கும் மேற்பட்ட முக்கிய ராணுவ இலக்குகளை அமெரிக்கப் படைகள் வான்வழி மற்றும் கடல்வழியாகத் தாக்கி அழித்துள்ளன. இதில் தெற்கு ஈரானின் பந்தர் அபாஸ், சபாஹர், கொனார உள்ளிட்ட முக்கிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் துறைமுக நகரங்கள் கடுமையான வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.இந்தத் தொடர் குண்டுவீச்சுகளில் தங்கள் நாட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதை இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த பதற்றமான சூழலில், ஈரானின் மிக முக்கிய புஷெஹர் அணுமின் நிலையத்தின் மிக அருகாமையில் அமெரிக்கப் படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் அரசு ஊடகங்களின்படி, இந்தத் தாக்குதலின் தாக்கத்தால் அணுமின் நிலைய வளாகத்திற்குள் இருக்கும் ஒரு கட்டிடம் பகுதியளவு பலத்த சேதமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், கதிர்வீச்சு அபாயம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
