CRIME
“ஒரு கப் டீக்காக இப்படியா?.. படுக்கையில் இருந்த மனைவியை உயிரோடு எரித்த கணவன்.. நீதிமன்றம் கொடுத்த மரண அடி தண்டனை”..!!
மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தேநீர் மற்றும் உணவு தயாரிக்க மறுத்த மனைவியைக் கொடூரமாகப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் பிரிதம் மீனாவிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்துள்ளது. 2024 ஜூலை மாதத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட துர்கா மீனா ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, சமையல் செய்யக் கூறி அவரது கணவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தில் வீட்டில் இருந்த எஃப்எம் ரேடியோவை அதிக சத்தத்தில் இயக்கிய பிரிதம், பின்னர் கீழே சென்று பாட்டிலில் பெட்ரோல் எடுத்து வந்து மனைவி மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் மற்றும் தாயின் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துர்கா, தன் கணவரின் கொடூரச் செயலை மரண வாக்குமூலமாகப் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, திருமணமான ஒரு வருடத்திலிருந்தே பிரிதம் மீனா வரதட்சணை கேட்டுத் தன் மகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகத் துர்காவின் தாய் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் வேலைக்குச் செல்லாமல் மனைவியை நிதி ரீதியாகத் துன்புறுத்தியதுடன், குடும்பத்தைக் காப்பாற்ற அவர் தவறான வழியிலாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திய அதிர்ச்சி உண்மைகளும் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்பட்டன. சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்கள், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறுதியான மரண வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில், கூடுதல் அமர்வு நீதிபதி சுசிதா ஸ்ரீவஸ்தவா, இது பெண்களுக்கு எதிரான மிகவும் கொடூரமான குற்றம் எனக் கூறி பிரிதம் மீனாவைக் கொலைக் குற்றவாளியாக அறிவித்து இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
