LATEST NEWS
“எங்கயும் போகல இங்கதான் இருக்கு… காணாமல் போன அம்மன் நகை… சாமியாடி கண்டுபிடித்த பூசாரி மனைவி..! பக்தி பரவசமா..? இல்ல ‘Masterplan’-ஆ… அதிர்ச்சியில் பக்தர்கள்..!!”
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழா விமரிசையாக தொடங்கியது. திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் அம்மன் சிலையில் அலங்கரிக்கப்பட்டிருந்த சுமார் 10 சவரன் தங்கச் சங்கிலி திடீரென காணாமல் போனது கண்டு கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். கோவில் முழுவதும் தேடியும் நகை கிடைக்காததால், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணையும் தொடங்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நேற்று மாலை தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, கோவில் பூசாரியின் மனைவி மகேஸ்வரிக்கு அருள்வந்து சாமியாடத் தொடங்கினார். சாமியாடியபடியே “என்னுடைய நகை எங்கும் போகவில்லை, இங்குதான் இருக்கிறது” எனக் கூறியவாறு கருவறைக்குள் சென்றவர், சில நிமிடங்களில் காணாமல் போன 10 சவரன் தங்கச் சங்கிலியை தன் கையில் எடுத்துவந்து பக்தர்களிடம் காண்பித்தார். இதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர்.
நகையை திருடிச் சென்றவர்கள் தெய்வக் குற்றத்திற்கு அஞ்சி மீண்டும் கோவிலிலேயே கொண்டுவந்து வைத்திருக்கலாம் என பொதுமக்கள் கருதிய அதேவேளையில், பூசாரியின் மனைவி நகை இருந்த இடத்தை எவ்வாறு சரியாகக் கண்டுபிடித்தார் என்பது குறித்துச் சிலர் ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் எழுப்பினர். மாயமான நகை மீண்டும் கிடைத்ததைத் தொடர்ந்து, தீமிதி திருவிழா எவ்வித இடையூறுகளும் இன்றி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
