LATEST NEWS
“நீ என்ன ஆபீஸுக்கா போற? வீட்லதானே இருக்க…” இந்த ஒரே கேள்வி ஏற்படுத்தும் மன உளைச்சல் தெரியுமா..? Work From Home ஊழியர்களைக் காயப்படுத்தும் குடும்பங்களின் தவறான புரிதல்..!!
கொரோனா காலத்திற்குப் பின் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை பல நிறுவனங்களில் நிரந்தரமாகிவிட்ட போதிலும், அதில் பல மறைமுகச் சவால்கள் நிறைந்துள்ளன. டெல்லியைச் சேர்ந்த ஹீனா டோக்ரா வெளியிட்ட காணொளி சுட்டிக்காட்டியது போல, வீட்டிலிருந்து வேலை செய்வோரை “அவர் ஓய்வாக இருக்கிறார்” என்றே பல குடும்ப உறுப்பினர்கள் அணுகுகின்றனர். மடிக்கணினி முன் தொடர்ந்து கூட்டங்களில் இருக்கும்போதே டீ போடுவது, விருந்தினர்களைக் கவனிப்பது போன்ற கோரிக்கைகள் வருவது, அவர்களின் பணி நேரத்திற்கான அங்கீகாரமும் மரியாதையும் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
அலுவலகத்திற்குச் செல்பவர்களுக்கு பணி நேரம் முடிந்ததும் ஒரு தெளிவு இருக்கும். ஆனால் வீட்டிலிருந்து வேலை செய்வோருக்குக் காலையில் தொடங்கும் பணி இரவு வரை நீண்டு, வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்குமான எல்லை மங்கிவிடுகிறது. ஒரே அறையில் அலுவலகமும் குடும்பமும் இயங்குவதால், உடல் சோர்வை விட மனச் சோர்வே அதிகமாகிறது. குறிப்பாக, பெண்களுக்கு அலுவலகப் பொறுப்புகளுடன் சமையல், குழந்தை பராமரிப்பு போன்ற கூடுதல் சுமைகளும் சேர்ந்து கொள்கின்றன. “நீங்கள் கொடுத்து வைத்தவர்” என்று உலகம் கூறினாலும், மிச்சமாகும் பயண நேரமும் கூடுதல் வேலை நேரமாகவே மாறி விடுகிறது.
இதற்கான தீர்வு குடும்பத்தினரின் சரியான புரிதலிலிருந்தே தொடங்க வேண்டும். வீட்டில் பணிபுரிபவர் விடுமுறையில் இல்லை என்பதை உணர்ந்து, வேலை நேர இடையூறுகளைத் தவிர்ப்பதும் தனியான பணியிடம் அமைத்துத் தருவதும் அவசியம். அதேபோல ஊழியர்களும் குறிப்பிட்ட வேலை நேரத்தை வரையறுத்து, பணி முடிந்ததும் மனதளவில் அலுவலகத்திலிருந்து வெளியேறப் பழக வேண்டும். கட்டிடத்திற்குள் அமர்வது மட்டுமே வேலையல்ல; கணினி மூலம் பொறுப்புடன் செயலாற்றுவதும் முழுமையான உழைப்பே என்பதைச் சமூகமும் குடும்பமும் உணரும்போதே இக்கலாச்சாரம் முழுமையடையும்.
