LATEST NEWS
முதலில் மறுத்த மேலிடம்… பிறகு ஏற்றுக்கொண்டது ஏன்…? தர்மேந்திர பிரதான் ராஜினாமாவின் ரகசிய பின்னணி..!!!
நீட் வினாத்தாள் கசிவு முறைகேடு மற்றும் சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 அன்று சிஜேபி தலைமையில் போராட்டம் தொடங்கியது. இதில் கல்வியாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்த நிலையில், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற பேரணி போராட்டத்திற்குப் பெருமளவு ஆதரவைத் திரட்டியது. அரசிற்கும் சிஜேபி பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் தொடர் அழுத்தத்தின் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே இரண்டு முறை தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும், ஆனால் கட்சி தலைமை அதனை நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரச்சனை தீவிரமாக இருக்கும் சூழலில் பொறுப்பில் இருந்து விலகுவது சரியாக இருக்காது எனத் தலைமை கருதியதாகக் கூறப்படுகிறது. எனினும், மீண்டும் ஒரு பேரணியை நடத்த சிஜேபி திட்டமிட்டதைத் தொடர்ந்து அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, பிரதானின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, பிரகலாத் ஜோஷி புதிய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற உடனடியாக, கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அடுத்தகட்ட சீர்திருத்தங்கள் குறித்து அவர் விவாதித்தார்.
