LATEST NEWS
4 சீட் கொடுத்தாங்க… உதயசூரியன் சின்னத்துலதான் நிக்கணும்னு பிரஷர் போட்டாங்க.. திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய பின்னணியை உடைத்த வைகோ..!!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேர்காணல் ஒன்றில் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார். கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது பிற தோழமைக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கிய திமுக, தங்கள் கட்சிக்கு வெறும் 4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி கடும் அவமதிப்பு செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், தேர்தல் களத்தில் தங்களுக்குக் குறைந்த அளவிலான முக்கியத்துவமே அளிக்கப்பட்டதாகவும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தொகுதிப் பங்கீட்டில் திருப்தி இல்லாத நிலையிலும், கூட்டணி தர்மத்திற்காக நான்கு சீட்டுகளை ஏற்றுக்கொள்ள முன்வந்ததாகக் குறிப்பிட்ட வைகோ, அதன்பின்னரும் திமுக தங்களுக்கு நெருக்கடி கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எனத் தனி அடையாளம் தேவை என்பதால் தனிச்சின்னத்தில் போட்டியிட அனுமதி கோரியபோது, அதை திமுக தலைமை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மாறாக, மதிமுக வேட்பாளர்கள் அனைவரும் கட்டாயம் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று கடுமையாக அழுத்தம் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
தங்கள் கட்சியின் சுயமரியாதையைக் காக்கவும், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் வேறு வழியின்றி கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்க வேண்டியதானது என்று வைகோ விளக்கியுள்ளார். “இன்னும் சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ள அவர், திமுக மேலிடம் கொடுத்த தொடர் அழுத்தங்களே கூட்டணியை விட்டு வெளியேற முதன்மை காரணம் என்பதைத் தனது பேட்டியில் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.
