LATEST NEWS
23 வருஷமா பூட்டியே கிடந்த லாக்கர்… திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! ரூ.50 லட்சம் நகை எங்கே..? கான்பூரில் சிக்கிய மர்ம முடிச்சு..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ஸ்வரூப் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில், பெண் ஒருவரின் வங்கி லாக்கரிலிருந்து சுமார்ரூ ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌஷல்பூரியைச் சேர்ந்த ரஷ்மி அரோரா என்பவர், கடந்த 2003-ஆம் ஆண்டு அப்போதைய ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர்’ கிளையில் சேமிப்புக் கணக்கு தொடங்கி, 23 எண் கொண்ட லாக்கரைப் பெற்று அதில் தனது நகைகளைப் பாதுகாப்பாக வைத்து வந்துள்ளார். தனது கணவர் காலமானதைத் தொடர்ந்து, அவர் மகளுடன் லக்னோவிற்குச் சென்றுவிட்டதால் நீண்ட காலமாக வங்கியின் லாக்கரைத் திறந்து பார்க்க முடியாமல் போயுள்ளது.
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு வங்கிக்கு நேரில் சென்றபோது, அவர் கணக்கு வைத்திருந்த வங்கி எஸ்பிஐ வங்கியுடன் இணைக்கப்பட்டுவிட்ட செய்தி தெரியவந்தது. இருப்பினும், லாக்கருக்கான கட்டணம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து தொடர்ந்து பிடித்தம் செய்யப்பட்டு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 27 அன்று ரஷ்மி அரோரா வங்கிக்குச் சென்று லாக்கரைத் திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகள் அனைத்தும் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடமும் ஊழியர்களிடமும் கேட்டபோது அவர்களிடம் இருந்து முறையான பதில் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, ரஷ்மி அரோரா காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகி வங்கி நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் அலட்சியம் குறித்துப் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் ஸ்வரூப் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். லாக்கரின் பாதுகாப்பு நடைமுறைகள், வங்கி பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், நகைகள் எப்போது, எப்படி மாயமாயின என்றும், இதில் வங்கி ஊழியர்களுக்கு ஏதேனும் தொடர்புள்ளதா என்றும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
