LATEST NEWS
“ஐயோ சம்பளம் போயிடுமே…! டவருக்காக என்னெல்லாம் பண்ண வேண்டியிருக்கு பாருங்க.. ஆன்லைன் அட்டெண்டன்ஸுக்காக பள்ளி கூரை மீது ஏறிய ஆசிரியர்கள்..! வைரலாகும் காட்சி..!!”
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘இ-அட்டெண்டன்ஸ்’ முறை ஆசிரியர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தர்பூர் ஜனசிக்ஷா கேந்திரா டட்டம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளியில், மொபைல் நெட்வொர்க் சிக்னல் கிடைக்காததால் ஆசிரியர்கள் ஆன்லைனில் வருகைப் பதிவு செய்யப் பள்ளியின் கூரை மீது ஏறி நெட்வொர்க் தேடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பள்ளி வளாகத்தில் போதிய மொபைல் நெட்வொர்க் இல்லாததால், ஆசிரியர்கள் ஆன்லைனில் வருகைப் பதிவு செய்யப் பள்ளியை விட்டு வெளியே செல்லவோ அல்லது இதுபோன்று உயரமான இடங்களுக்குச் செல்லவோ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இ-அட்டெண்டன்ஸ் முறையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், நெட்வொர்க் கோளாறால் குறித்த நேரத்தில் வருகைப் பதிவு செய்ய முடியாவிட்டால் தங்களின் சம்பளம் பிடிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். நெட்வொர்க் கிடைக்காதது தங்களின் தவறு அல்ல என்ற போதிலும், அதன் பாதிப்பு தங்களின் பணி மற்றும் ஊதியத்தில் எதிரொலிப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல் வருகைப் பதிவு முறை என்பது நல்ல முயற்சி என்றாலும், அதற்குத் தேவையான அடிப்படை இணைய வசதிகளை முதலில் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். போதிய நெட்வொர்க் வசதி இல்லாத கிராமப்புறப் பள்ளிகளில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அல்லது இணைய இணைப்பைச் சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வைரல் வீடியோ, கிராமப்புறப் பள்ளிகளில் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி டிஜிட்டல் முறையை அவசரகதியில் அமல்படுத்துவது குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
