LATEST NEWS
“செருப்பு இல்லாம வந்த எம்.எல்.ஏ-விடம் 2.7 கோடி சொத்து” உங்களுக்கு இன்னோவா கார் கேட்குதா..? தவெக எம்.எல்.ஏ-க்களின் கார் கோரிக்கையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!
தமிழக சட்டப்பேரவையில் தங்களது போக்குவரத்திற்காகப் புதிய கார்கள் வழங்க வேண்டும் என தவெக எம்.எல்.ஏ-க்கள் வைத்த கோரிக்கை, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது. தங்களுக்கு அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்பட்டால் தொகுதிப் பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், கோரிக்கை வைத்த பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் ஏற்கனவே பெரும் கோடீஸ்வரர்களாகவும், சொகுசு கார்களை வைத்திருப்பவர்களாகவும் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதில் குறிப்பாக, தவெக எம்.எல்.ஏ-வான சபரி ஐங்கரனிடம் ஏற்கனவே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான டாடா கார் பயன்பாட்டில் உள்ளது. மற்றொரு தவெக எம்.எல்.ஏ-வான சண்முகத்திடமோ 4 சொகுசு கார்கள் சொந்தமாகவே உள்ளன. கடந்த முறை சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு மிகவும் எளிமையாக, காலில் செருப்பு கூட அணியாமல் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கே.வி. குப்பம் தொகுதி தவெக எம்.எல்.ஏ தென்றல் குமாரிடம் கூட, தேர்தல் கணக்கு விபரங்களின்படி சுமார் 2.7 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், சொந்தமாக இத்தனை சொத்துக்களும், சொகுசு கார்களும் வைத்திருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு, மக்களின் வரிப்பணத்தில் இருந்து புதிய கார்களை வழங்க வேண்டுமா என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் காரசாரமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். எளிமையைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த கார் கோரிக்கையும், அதற்குப் பின்னால் இருக்கும் அவர்களது நிஜமான சொத்து விபரங்களும் தற்போது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
