LATEST NEWS
“குள்ளநரி கும்பலின் சதி..” அடுத்த பிரதமர் விஜய்..? முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டால் தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காரசாரமான விமர்சனங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. விஜய்யைத் தேசிய அரசியலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அவரைச் சுற்றியுள்ள “குள்ளநரி கும்பல்” ஒன்று முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றத் திட்டமிட்டு வருவதாக அப்பாவு பகிரங்கக் குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார்.
சிறுபான்மையினர் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த விஜய், தற்போது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைக் கொண்ட பாஜக ஆட்சியைத் தமிழகத்தில் நடத்தி வருவதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், சட்டமன்றத்தில் விஜய் அடுத்த பிரதமராக வருவார் என்று அமைச்சர் ஒருவர் கூறியபோது, அதை எதிர்த்துக் கேள்வி எழுப்பாமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ரசித்தது வேடிக்கையாகவும் கேவலமாகவும் இருப்பதாகவும் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலமைச்சர் பதவியிலிருந்து விஜய்யை அகற்றுவதற்கான சதி நடைபெறுகிறதா என்பதை அவர் உணர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அப்பாவு, தவறான தகவல்களை ‘ரீல்ஸ்’ வடிவில் மாற்றிப் பரப்பும் கலாச்சாரத்தை இந்த அரசு உருவாக்கி வருவதாகக் குற்றம்சாட்டினார். இலவச மருத்துவம், உடனடி மரண தண்டனை போன்ற பொய்ப் பிரசாரங்களை வடமாநிலங்களில் பரப்புவதற்காகப் பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்தி மொழியில் ரீல்ஸ்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தவெக சார்பில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற செயல்களைக் கண்டு இந்தியாவே சிரிப்பதாக அப்பாவு எள்ளி நகையாடியுள்ளார். மேலும், போலி சமூக வலைதளக் கணக்குகள் மூலம் பொய்யான தகவல்களைப் பரப்பும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, நீதிமன்றத்தை நாடி உரிய தண்டனை பெற்றுத் தர பொதுமக்கள் தயாராகி வருவதாகவும் அவர் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.
