LATEST NEWS
உங்க தப்ப மறைக்க என் புருஷனை இழுக்காதீங்க… நாங்க கள்ளத்தனமா தொழில் பண்ணல… லீகலா தான் பண்ணுறோம்.. திமுகவினருக்கு எதிராக கொந்தளித்த MLA லீமா ரோஸ்..!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, தொழில்துறை, இயற்கை வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திட்டம் நில நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலப் பகுதிகளைக் கொண்டிருப்பதால் எந்த நகர்வும் இன்றி இருந்ததாகத் தெரிவித்தார். மேலும், ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை மற்றும் கருப்புப் பண முதலீட்டாளர்களே இத்திட்டம் குறித்து அதிகம் கவலைப்படுவதாக அவர் கூறியது அவையில் திமுக உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பிற்கும் கூச்சலுக்கும் வழிவகுத்தது.
இதனைத் தொடர்ந்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜி ஸ்கொயர் என்று குறிப்பிடுவதாக இருந்தால், எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இவரது இந்த கருத்திற்கு தவெக உறுப்பினர்கள் அவையில் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் பேரவையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்த காரசாரமான விவாதம் மற்றும் குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
சட்டமன்றத்தில் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டிய கருத்து குறித்து, பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியும் லால்குடி தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான லீமா ரோஸ் செய்தியாளர்களைச் சந்தித்து தனது கண்டனத்தையும் விளக்கத்தையும் பதிவு செய்தார். முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு திடீரென லாட்டரி தொழிலை இழுத்துப் பேசுவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறிய அவர், தனது கணவர் சட்டப்பூர்வமாக பல்வேறு மாநிலங்களில் தொழில் செய்து வருபவர் என்று தெளிவுபடுத்தினார்.
மேலும் பேசிய லீமா ரோஸ், அண்ணா காலத்தில் தொடங்கப்பட்ட லாட்டரி தொழிலை தங்களது நிறுவனம் அனைத்து அரசு விதிகளுக்கும் உட்பட்டு, முறையாக வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி (GST) செலுத்தியே நடத்தி வருவதாகக் கூறினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாநில அரசுகளின் அனுமதி மற்றும் சட்டப்பூர்வ உரிமத்துடன் நேர்மையாக வியாபாரம் செய்து வரும் நிலையில், கள்ளத்தனமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ தொழில் செய்வது போல பேசுவது அநீதியானது என்றும், அரசியலுக்காக இத்தொழிலைக் கொச்சைப்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தன்னுடைய மருமகன் ஏற்கனவே லாட்டரி தொழிலில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்ட நிலையிலும், மின்சாரத்துறை அமைச்சர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திமுகவினர் தங்கள் தவறுகளை மறைப்பதற்காகத் தேவையில்லாமல் தங்கள் குடும்பத்தை இழுப்பதாக லீமா ரோஸ் கொந்தளித்தார். சட்டமன்றத்தில் அமைச்சரின் கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல், சட்டப்பூர்வமாக தொழில் செய்பவர்களை நோக்கி அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியில் காட்டமாகத் தெரிவித்தார்.
