LATEST NEWS
“மாணவர்களுக்கு வேலை எங்கே..? தப்பு செய்தவங்க மேல ஆக்ஷன் எடுங்க..!” பிபிஎஸ்சி போராட்டத்தில் கையில் தேசியக் கொடியுடன் முழங்கிய 6 வயது ‘ஜென் ஆல்ஃபா’..! இணையத்தைக் கலக்கும் சிறுவனின் வைரல் வீடியோ..!!
பீகாரில் பி.பி.எஸ்.சி தேர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து வேலைதேடும் இளைஞர்களும் மாணவர்களும் நடத்திய போராட்டத்தில், 6 வயது சிறுவன் ஆதித்யா கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி கலந்து கொண்டான். அங்கு கூடியிருந்த ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களிடம் பேசிய சிறுவன், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காதது குறித்து கேள்வி எழுப்பியதோடு, முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தடியடி நடத்த உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தைரியமாக முழக்கங்களை எழுப்பினான்.
சிறுவனின் இந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள், சிறுவனையும் அவனது தாயாரையும் போராட்டக் களத்தில் இருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுவன் காவல் துறையால் கைது அல்லது சிறைபிடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்தன.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளைக் காவல் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், போராட்டம் நடந்த இடத்தில் தடியடி மற்றும் கலவரச் சூழல் நிலவியதாலும் சிறுவனைப் பாதுகாப்பாக மீட்டெடுத்து அவனது பெற்றோரிடம் ஒப்படைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். காவல் நிலையத்திலிருந்து சிறுவன் வெளியில் வந்தபோது, அங்கிருந்த போராட்டக்காரர்கள் அவனை “ஜென் ஆல்ஃபா” எனக் கூறி ஆரவாரம் செய்தனர்.
