CRIME
“ஐயோ.. என் பொண்ணை இப்படி கொன்னுட்டானே..!” பெற்ற தாய் வீட்டில் தஞ்சம் அடைந்த மனைவி… தேடிச் சென்று உயிரோடு கொளுத்திய கணவன்… பகீர் பின்னணி..!!
ஜாய்ஸ்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் மீது கணவனே பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிகாரிபாரா காவல் எல்லைக்குட்பட்ட சந்தன்கடியா கிராமத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சனிச்சரியா தேவி என்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், அவரது கணவர் அர்ஜுன் ராய் தான் இந்த கொடூரச் செயலைச் செய்தார் என்று குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான கணவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கந்தரக்பூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் ராய்க்கும், சந்தன்கடியா கிராமத்தைச் சேர்ந்த சனிச்சரியா தேவிக்கும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு, அர்ஜுன் மனைவியை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த சனிச்சரியா தேவி கடந்த சில காலமாகத் தன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அர்ஜுன் ராய் தனது மாமனார் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறின் போது ஆத்திரமடைந்த அர்ஜுன், வீட்டில் இருந்த பெட்ரோல் பாட்டிலைக் கைப்பற்றி மனைவியின் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த சனிச்சரியாவை மீட்டு மேற்கு வங்கத்தில் உள்ள ராம்பூர்ஹாட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிகாரிபாரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக உள்ள அர்ஜுன் ராயைப் பிடிக்கப் பல இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
