CRIME
“சிக்கிட்டான் சிவனாண்டி” அலமாரிக்குள் ஒளிந்த போதைப்பொருள் கும்பல் தலைவன்… காட்டிக்குடுத்த இலவச வைஃபை… சைபர் போலீசாரின் அதிரடி வேட்டை..!!
இங்கிலாந்தின் வடமேற்கு லண்டனில் ‘பாபி டிரக் லைன்’ என்ற போதைப்பொருள் நெட்வொர்க்கின் கீழ் கோகைன், ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்த ஜோயல் லூயிஸ் (34) என்ற ஆசாமி, இலவச வைஃபை மூலம் போலீசாரிடம் சிக்கிய சுவாரஸ்யமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட சில சிறுவர்களின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தபோதுதான், சிறுவர்களையும் இளைஞர்களையும் பகடைக்காயாகப் பயன்படுத்தி லூயிஸ் இந்த நெட்வொர்க்கை நடத்தி வந்தது தெரியவந்தது.
போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த லூயிஸ், உடனடியாகத் தப்பித்துத் தலைமறைவானார். தனது இருப்பிடத்தைக் காட்டிவிடக் கூடாது என்பதற்காகத் தனது மொபைல் மற்றும் லேப்டாப்பில் விபிஎன் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி லொகேஷனை மறைத்துள்ளார். ஆனால், அவரது சாதனங்களில் ஒன்று அவர் தங்கியிருந்த இடத்தின் இலவச பப்ளிக் வைஃபை உடன் தானாக இணைந்ததால், அதை டிஜிட்டல் தடம் கொண்டு துல்லியமாகக் கண்காணித்த போலீசார் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர். கைது வாரண்ட்டுடன் போலீசார் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தபோது, அவர் தப்பிக்க வழி தெரியாமல் அலமாரிக்குள் ஒளிந்திருந்த நிலையில் கையாங்காலுமாகப் பிடிபட்டார்.
கைது செய்யப்பட்ட லூயிஸ், “என்னை எப்படி கண்டுபிடித்தீர்கள்?” எனத் திரும்பத் திரும்பக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அவரிடமிருந்து 6 செல்போன்கள், 8,000 பவுண்ட் ரொக்கப் பணம், ஆயுதங்கள் மற்றும் சிறுவர்கள் மூலம் கடத்தப்படவிருந்த 8,800 பவுண்ட்கள் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் இருந்த காண்டாக்ட் லிஸ்ட்டில் 250-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் வியாபாரிகளின் எண்கள் இருந்ததால், அதை வைத்து இந்த மொத்த நெட்வொர்க்கையும் வேரறுக்கும் முயற்சியில் லண்டன் போலீசார் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
