CRIME
“30% வட்டி தர்றேன்..” ஆசை காட்டி 23 லட்சத்தை சுருட்டிய 39 வயது பெண்.. பின்னணியில் இருக்கும் பகீர் நெட்வொர்க்..!!
சென்னையில் அதிக வட்டி தருவதாகக் கூறி போலி முதலீட்டுத் திட்டம் மூலம் ரூ.23 லட்சம் மோசடி செய்த புகாரில் பூஜா ஜெயின் (39) என்ற பெண் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் வங்கிகளில் பணிபுரிந்த அனுபவத்தை வைத்து வாடிக்கையாளர்களின் தரவுகளைத் திரட்டிய இவர், ‘இந்தியா பாண்ட்ஸ் லிமிடெட்’ என்ற போலி இணையதளம் மற்றும் ‘ஐ.பி.எல். அன்ட் கோ’ என்ற பெயரில் போலியான நடப்புக் கணக்கையும் உருவாக்கியுள்ளார். ஹேமா பிரியதர்ஷினி என்பவரிடம் ‘ஐ.பி.எல். பண்ட்’ திட்டத்தில் முதலீடு செய்தால் 30% லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி, அவரிடமிருந்து சிறுகச் சிறுக ரூ.23 லட்சத்தைப் பெற்றுத் தனது சொந்தக் கணக்கிற்கு மாற்றித் துரோகம் செய்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹேமா பிரியதர்ஷினி அளித்த புகாரைத் தொடர்ந்து, பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த பூஜா ஜெயினை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த லேப்டாப் மற்றும் 2 மொபைல் போன்களைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கைதான பூஜா ஜெயின் மீது ஏற்கனவே நுங்கம்பாக்கம், கொளத்தூர் மற்றும் மத்திய குற்றப்பிரிவில் பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது அம்பலமாகியுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பூஜா ஜெயினுக்குப் பின்னணியில் இந்த மோசடி நெட்வொர்க்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
