LATEST NEWS
ரீல்ஸ் போடுவதை விட்டுட்டு முதல்ல சட்டம் – ஒழுங்கை பாருங்க… த.வெ.க அரசை வெளுத்து வாங்கிய கனிமொழி…! பண்ருட்டி சம்பவத்தால் தீவிரமடையும் அரசியல் காரசார விவாதம்..!!
பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வசாதாரணாமாகிவிட்டது. பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், ஏன் சிறைக் கைதிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை எனும் நிலையைத் தமிழ்நாட்டில் உருவாக்கி சட்டம் ஒழுங்கை தினமும் சர்வ நாசம் செய்து கொண்டிருக்கிறது த.வெ.க. அரசு.
பண்ருட்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய மருத்துவச் சிகிச்சையும், பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும். குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பதில் தாமதிக்காமல் இனியாவது இந்தப் பொறுப்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? இல்லை ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா? என கனிமொழி எம்.பி. சாடியுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் வடகைலாசம் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தில் திவ்யா (23) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் பணியில் இருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (30) என்பவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சரமாரியாகக் குத்தினார். இதில் காயமடைந்த திவ்யா மீட்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், வாலிபரைப் பிடித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
