LATEST NEWS
“கோவில் நிலத்தில் திமுக அலுவலகமா?” ரூ.50 கோடி ஸ்ரீரங்கம் கோவில் நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடி.. திமுக முக்கியப் புள்ளி மீது அதிரடி வழக்கு.!!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான சுமார் ₹50 கோடி மதிப்பிலான நிலம், போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டு, அங்கு திமுக பகுதி அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாகத் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்
இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த அறிவியல் பூர்வமான நில அபகரிப்பு ஊழல் தொடர்பான முக்கிய ஆவண ஆதாரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
கடந்த 1930 ஆம் ஆண்டு பொதுப்பணிகளுக்காகவும் அறக்கட்டளை தர்ம காரியங்களுக்காகவும் கோவிலுக்கு எழுதி வைக்கப்பட்ட இந்த நிலத்தை, கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் போலி ஆவணங்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இந்த மோசடியின் பின்னணியில் ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளரான ராம்குமார் என்பவர் இருப்பதாகக் கூறி, அவர் மீது தற்போது 6 பிரிவுகளின் கீழ் குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராம்குமாரின் மனைவி திருச்சி மாநகராட்சியின் வார்டு கவுன்சிலராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மெகா நில மோசடி குறித்துக் கொந்தளித்துப் பேசிய அமைச்சர் ரமேஷ், முந்தைய திமுக ஆட்சியில் அதிகாரத்தில் இருந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் நேரடித் தலையீடும், பின்னணி ஆதரவும் இல்லாமல் இப்படியொரு பிரம்மாண்ட மோசடி நடந்திருக்கவே வாய்ப்பில்லை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தில் செயல்பட்டு வரும் திமுக அலுவலக விவகாரத்தில், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்து பின்னால் இருந்து உதவியவர்கள் யார் என்பதைச் சட்டத்தின் முன் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுப்போம்” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
