LATEST NEWS
“இறந்த பின்னும் நிம்மதி இல்லையா..?” பிணவறையில் சடலத்திற்கு நேர்ந்த கொடூர கதி.. அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்.. பரபரப்பு பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் வர்தன்னபேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில், பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நபரின் சடலத்தைக் எலிகள் கடித்துக் குதறிய மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கௌரா வீரையா என்ற நபர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்காகக் காவல் துறையினர் இந்த அரசு மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டு வந்து வைத்துள்ளனர். ஆனால், மறுநாள் காலையில் பிரேதப் பரிசோதனைக்காக வந்த அவரது குடும்பத்தினர், வீரையாவின் சடலத்தின் கண் பகுதியை எலிகள் கொடூரமாகக் கடித்துக் குதறியிருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சியும் ஆழமான மனவேதனையும் அடைந்தனர்.
அரசு மருத்துவமனையில் சடலங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்குத் தேவையான ‘பிரீஸர் பாக்ஸ்’ போன்ற மிக அடிப்படையான வசதிகள் கூட இல்லாததே இந்த அவல நிலைக்குக் காரணம் என உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். பிணவறையின் இத்தகைய அலட்சியப் போக்கைக் கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் அவர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் நிலவும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் சடலங்களுக்குக் கூட மரியாதை இல்லாத இந்த அவல நிலை குறித்துப் பொதுமக்கள் தங்களின் கடுமையான கண்டனங்களை அரசுக்கு எதிராகப் பதிவு செய்து வருகின்றனர்.
