CRIME
19 வருடமாக போலீஸுக்கே ‘டிமிக்கி’ கொடுத்த கொலையாளி… சத்தமில்லாமல் தூக்கிய ஏஐ தொழில்நுட்பம்.. பின்னணியில் இருந்த மாஸ்டர் பிளான்..!!
தமிழ்நாடு காவல்துறையினர் கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் சிக்கி, சுமார் 19 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியை நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 2007-ஆம் ஆண்டு சென்னை திருவொற்றியூர் பகுதியில் பாண்டியமணி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஷேக் அப்துல்லா, போலீசாரின் கண்ணில் சிக்காமல் நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், குற்றவாளியைப் பிடிக்கப் புதிய வியூகம் ஒன்றை வகுத்தனர். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கடந்துவிட்டதால் குற்றவாளியின் தற்போதைய முக அமைப்பைக் கண்டறிய, அவர் 20 வயதில் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து நவீன ஏஐ உருவ அமைப்பு தொழில்நுட்பத்தின் மூலம் அவர் தற்போது 39 வயதில் எப்படி இருப்பார் என்ற தோற்றத்தை போலீசார் துல்லியமாக உருவாக்கினர்.
அந்த ஏஐ புகைப்படத்தை அடிப்படையாக வைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் அவர் முன்பு வசித்த பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இறுதியாக, 39 வயதான ஷேக் அப்துல்லா திருமுல்லைவாயில் சோழம்பேடு மெயின் ரோடு பகுதியில் தனது குடும்பத்துடன் ரகசியமாக வாழ்ந்து வருவதைக் கண்டுபிடித்த தனிப்படை போலீசார், அவரைச் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 19 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய புகைப்படத்தை வைத்து ஏஐ மூலம் கொலையாளியைக் கண்டுபிடித்த தமிழக போலீசாரின் இந்தத் துரித நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
