CRIME
அதிர்ச்சி.. போதை மருந்துக்காக 14 வயது சிறுமியை மருத்துவரிடம் விற்ற பெண்.. அம்பலமான பகீர் பின்னணி!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டைலர் பகுதியில், தன் போதை மருந்து தேவைக்காக 14 வயது சிறுமியை மருத்துவர் ஒருவரிடம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த அழைத்துச் சென்ற 37 வயது அலிசியா எவோன் சான்செஸ் என்ற பெண் கடந்த புதன்கிழமை அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வயதான மருத்துவர் கென்னத் ஹேகூட்டிடம் அந்தச் சிறுமியை குறைந்தது 10 முறையாவது அலிசியா அழைத்துச் சென்றதாகவும், பாலியல் வன்கொடுமை நடக்கும்போது அங்கேயே தங்கியிருந்ததாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமி அழுது தடுத்தபோதும், “மருத்துவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்” என்று கூறி அலிசியா அதனைத் தொடர்ந்துள்ளார். மருத்துவர் தனக்குப் பரிந்துரைத்த போதை தரும் மருந்துகளுக்கு ஈடாகவே அலிசியா இந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது அலிசியா மீது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 14 வயதுக்குட்பட்ட குழந்தையைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அலிசியாவிற்கு 99 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய மருத்துவர் கென்னத் ஹேகூட், இரண்டு பெண் நோயாளிகள் மற்றும் இந்தச் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் தாக்கிய குற்றங்களை ஏற்கனவே ஒப்புக்கொண்டதால், அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது தண்டனை அனுபவித்து வருகிறார். மேலும், அவர் வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
