“21 வருடத் திருமணம், 3 குழந்தைகள்…” ஒரு ‘முத்தலாக்’ கொடுத்த கணவருக்கு பாட்னா நீதிமன்றம் கொடுத்த பளார் தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“21 வருடத் திருமணம், 3 குழந்தைகள்…” ஒரு ‘முத்தலாக்’ கொடுத்த கணவருக்கு பாட்னா நீதிமன்றம் கொடுத்த பளார் தீர்ப்பு..!!

Published

on

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில், 21 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு தன் மனைவிக்கு உடனடி ‘முத்தலாக்’ கூறிய கணவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.6,500 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பாட்னா மாவட்டத்தின் பிஹ்டா காவல் எல்லைக்குட்பட்ட சிம்ரி கிராமத்தைச் சேர்ந்த நௌஷாத் அகமது என்பவருக்கு, பாட்னா மாவட்ட மற்றும் கூடுதல் அமர்வு நீதிபதி ராஜீவ் ரஞ்சன் சஹாய் தலைமையிலான நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது. பாட்னா மாவட்டத்தில் பதிவாகி, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள முதல் முத்தலாக் வழக்கு இதுவாகும்.

பாதிக்கப்பட்ட ரசியா சுல்தான் என்ற குடியாவுக்கும், நௌஷாத் அகமதுவிற்கும் கடந்த 2001-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டில், நௌஷாத் தனது மனைவியையும் குழந்தைகளையும் தாக்கியதுடன், மனைவியின் முகத்தில் ஆசிட் வீசவும் முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 2022 செப்டம்பர் 5 அன்று நௌஷாத் தனது மனைவிக்கு முத்தலாக் கூறியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் புல்வாரி ஷெரீஃப் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் முஸ்லிம் பெண்கள் சட்டம், 2019-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisement

காவல்துறை இந்த வழக்கில் 2023 ஜூலை 31 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அரசுத் தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்சிகளின் விசாரணைக்குத் பிறகு, முஸ்லிம் பெண்கள் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் ஐபிசி 323, 341 ஆகிய பிரிவுகளின் கீழ் நௌஷாத் அகமது குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டது. நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், நௌஷாத் கூடுதலாக ஒரு மாதம் 22 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும், அபராதத் தொகை மீட்கப்பட்டவுடன் அது பாதிக்கப்பட்ட மனைவியிடம் வழங்கப்படும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in