CRIME
“அவரே என்னை கொன்றுவிட்டு…” கழுத்தில் வெட்டுக்காயத்துடன் மனைவி, தூக்கில் கணவன்.. கடிதத்தில் இருந்த அதிர்ச்சி உண்மை..!!
சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியில், திருமணாமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததாலும், நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாததாலும் கடும் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்ட சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடி படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் (41) மற்றும் அவரது மனைவி மாலதி (38) ஆகிய இருவரது உடல்களும், அவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அழுகிய நிலையில் கொரட்டூர் காவல்துறையினரால் மீட்கப்பட்டன. கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணமான இந்த தம்பதியினர், வீட்டின் அத்தியாவசியத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வறுமையில் வாடி வந்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அருண்குமார் தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவி மாலதி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததும் கண்டறியப்பட்டது. உடல்கள் இரண்டு நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்ததால் அழுகிய நிலையில் காணப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரு உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில், உயிரிழப்பதற்கு முன்னதாக மாலதி எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
அந்தக் கடிதத்தில், குழந்தை இல்லாத ஏக்கம் மற்றும் கடுமையான வறுமை காரணமாகத் தங்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவித்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தங்களின் இந்த முடிவுக்கு வேறு யாரும் காரணமில்லை என்றும், தனது கணவர் தன்னைக் கொலை செய்துவிட்டுப் பின்னர் அவரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மாலதி எழுதியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தற்கொலை கடிதத்தின் அடிப்படையில், இது மாலதியின் சம்மதத்துடன் நடந்த கொலையா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் கொரட்டூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
