LATEST NEWS
“என்னை அழிக்க முடியாது…” ஒரே நாளில் 25 ரீல்ஸ்… வைரல் யூடியூபர் மதுமிதாவின் தடாலடி ரீ-என்ட்ரி..!!
நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல யூடியூபர் மதுமிதா (28). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவது, மகளின் மீது பணத்தைக் கொட்டுவது மற்றும் அதிக நகைகளை அணிந்து கொண்டு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர். கடந்த செப்டம்பர் மாதம் இவரது வீட்டில் மர்மநபர்கள் புகுந்து 118 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட வீடியோக்களைப் பார்த்தே இந்தத் திருட்டு நடந்துள்ளதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். மேலும், காண்டிராக்டர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது நகைபறிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
வீட்டில் திருட்டு போனது மற்றும் தன் மீதான புகார்கள் போன்ற காரணங்களால் மதுமிதா சில நாட்களாக ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிடுவதை நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் அவர் மீண்டும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார். தன் மீது அவதூறு பரப்புபவர்களின் எண்ணம் நடக்காது என்றும், தன்னைப்பற்றி பேசினால் தான் மேலும் உயர்ந்து கொண்டே செல்வேன் என்றும் கூறி தனது குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோக்களை அவர் வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று ஒரே நாளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 25 ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக மீன் அவியல் சமைப்பதை வீடியோவாக எடுத்து அதை பல பகுதிகளாகப் பிரித்து ரீல்ஸ்களாகப் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோக்களை ஏராளமான பயனர்கள் பார்வையிட்டு வரும் நிலையில், மதுமிதா இதுவரை தன் பக்கத்தில் 6,720 வீடியோக்களைப் பதிவேற்றம் செய்துள்ளார் மற்றும் அவரை 4,86,000 பேர் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
