LATEST NEWS
“விளையாட்டு வினையான கதை…! ஒரு பிராங்க்… மணப்பெண் தோழிக்கு நேர்ந்த விபரீதம்…! ரூ.32 லட்சத்தை இழப்பீடாக அள்ளிக் கொடுத்த நண்பர்கள்..!!”
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் நடைபெற்ற திருமண விழாவில், மணப்பெண்ணின் தோழியாக கலந்துகொண்ட 20 வயது பெண்ணுக்கு ‘திருமணக் கேலி விளையாட்டு’ என்ற பெயரில் பெரும் விபரீதம் நேர்ந்தது. திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் சிலர், அப்பெண்ணை மெத்தையில் இழுத்துப்போட்டு, போர்வைக்குள் சுருட்டி காற்றில் மேலே தூக்கிப் போட்டு விளையாடியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது முறை தூக்கிப் போட்டபோது அவரைக் பிடிக்கத் தவறியதால், அப்பெண் பலமாகத் தரையில் விழுந்து முதுகெலும்பில் கடுமையான காயமடைந்தார்.
இந்த விபத்தில் அப்பெண்ணின் முதுகெலும்பு முறிந்து, அவர் 18 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு ‘கிரேடு 9’ அளவிலான நிரந்தர ஊனம் ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்தச் சம்பவத்தில் அப்பெண் மீது எந்தத் தவறும் இல்லை எனக் கூறிய நீதிமன்றம், அவருக்குக் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடாக 2,30,000 யுவான் வழங்க உத்தரவிட்டது.
இந்த இழப்பீட்டுத் தொகையில், ஆபத்தான வழக்கத்தைத் தடுக்கத் தவறியதற்காகத் திருமணத் தம்பதியருக்கு 40% பொறுப்பு விதிக்கப்பட்டது. அப்பெண்ணை முதன்முதலில் இழுத்து வந்த முக்கிய நபருக்கு 20% பொறுப்பும், நிகழ்வில் பங்கேற்ற மற்ற 8 நபர்களுக்கு மீதமுள்ள 40% பொறுப்பும் பிரித்து வழங்கப்பட்டது. திருமண கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மற்றவர்களின் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து விளைவிக்கும் விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுவது சட்டப்படி குற்ற தண்டனைக்குரியது என்பதை இந்நீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
