LATEST NEWS
என் நிறம் ஒரு குற்றமா…? நிறத்தைக் காரணம் காட்டி 10 முறை நிராகரிக்கப்பட்ட திருமணம்…! அடுத்த வரன் வருவதற்குள் பீகாரில் இளம் பெண் எடுத்த கொடூர முடிவு..!!!
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் காய்காட் காவல் எல்லைக்குட்பட்ட மகரந்தபூர் கிராமத்தில், திருமண வரன்கள் தொடர்ந்து ரத்தானதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 22 வயது இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் நடந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட பெண் அதே பகுதியைச் சேர்ந்த பீதாம்பர் குமார் என்பவரின் மகள் அன்ஷு குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக அன்ஷு குமாரிக்கு மாப்பிள்ளை தேடும் பணி நடந்து வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட மாப்பிள்ளை வீட்டார் அவரைப் பெண் பார்க்க வந்துள்ளனர். ஆனால், பெண்ணின் சற்றே மாநிறமான உடல் நிறத்தைக் காரணம் காட்டி, ஒவ்வொரு முறையும் அந்த திருமண வரன்கள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அன்ஷு குமாரி கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையில், புதன்கிழமையன்று 11-வதாக மற்றொரு மாப்பிள்ளை வீட்டார் அவரைப் பெண் பார்க்க வரவிருந்தனர். இந்த முறையும் தனது நிறத்தின் காரணமாக வரன் நிராகரிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அன்ஷு குமாரி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் செவ்வாய்க்கிழமை இரவு உணவருந்தாமல் தனது அறைக்குச் சென்றவர், துப்பட்டாவால் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலை நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியே பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த காய்காட் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
