LATEST NEWS
“மார்க்கண்டேயனை தூக்கி உள்ளே போடுங்க சார்” தவெக அரசின் அதிரடி கைதுக்கு பாஜக திடீர் ஆதரவு.. தென் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டும் வகையிலும் பேசியதாகக் கூறி, தவெக அரசு அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளது. கோவில்பட்டி கூட்டத்தில் பேசிய விவகாரம் தொடர்பாகத் தவெக மாவட்டச் செயலாளர் அளித்த புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கனிமொழி எம்பி உள்ளிட்ட திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திமுகவினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், இந்த நடவடிக்கையை பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வரவேற்றுப் பாராட்டியுள்ளார். பொது மேடைகளில் முதல்வர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது அவதூறாகப் பேசுபவர்கள் மீது இத்தகைய சட்டப்பூர்வ நடவடிக்கை அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.
அதேவேளையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக திமுகவினர் பேசிய புகார்கள் மீதும் இதேபோல அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாஜக வலியுறுத்தியுள்ளது. தவெக அரசின் இந்த நடவடிக்கையை, மற்றொரு எதிர்க்கட்சியான பாஜக ஆதரித்திருப்பது தென் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
