CRIME
சுடுகாட்டில் புதைக்கப்பட்டசடலங்களை தோண்டி எடுத்து… ₹200 முதல் ₹500 வரை விற்ற கொடூரம்… என்ன காரணம்..? திடுக்கிட வைக்கும் தகவல்கள்…!!
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பிணங்கள் மற்றும் எலும்புக்கூடுகளைத் தோண்டி எடுத்து, வெறும் 200 ரூபாய்க்குத் தனியார் மருத்துவக் கல்லூரி ஊழியர்களுக்கு விற்று வந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சட்டவிரோதச் செயலில் பிணங்களைத் துண்டு துண்டாக வெட்டி அதன் பாகங்களையும் விற்று வந்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் படிப்பதற்காக இந்த உடல்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்த புகார்களைத் தொடர்ந்து, டவுன் மந்த்ராயலா சாலையில் உள்ள சுடுகாட்டில் போலீசாரும் அரசு அதிகாரிகளும் நேற்று காலையில் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ராஜு மற்றும் அப்சர் ஆகிய இரண்டு ஊழியர்கள், அங்கிருந்த சிலரின் உதவியுடன் புதைக்கப்பட்டிருந்த 2 பிணங்களைத் தோண்டி எடுத்து விலைக்கு வாங்கியபோது, அதிகாரிகளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் நீண்ட நாட்களாக இந்த பிணங்கள் மற்றும் எலும்புக்கூடுகளைச் சட்டவிரோதமாக வாங்கி வந்ததை ஒப்புக்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக நேதாஜிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த நெஞ்சை உலுக்கும் சட்டவிரோத வர்த்தகத்தின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
