LATEST NEWS
“வண்டியும் குடுத்து, காசும் குடுத்தா எவன் எதிர்த்துப் பேசுவான்.. அதுக்கு தானா..?” தவெக அரசின் முகத்திரையைக் கிழித்த சீமான்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தமிழக சட்டமன்றத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 110-விதியின் கீழ் இலவச மகிழுந்து மற்றும் அதற்கான பராமரிப்புச் செலவுகளுக்கு மாதம் ரூ.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் போதுமான சம்பளமும் வாகனப்படியும் வழங்கப்பட்டு வரும் நிலையில், பெரும்பான்மையான உறுப்பினர்களிடம் சொந்தமாக வாகனங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், மக்கள் வரிப்பணத்திலிருந்து கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி சொகுசு வாகனங்களை வழங்குவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தேர்தல் சமயத்தில் பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் நிதி நெருக்கடி என்று வெள்ளை அறிக்கை வெளியிட்ட அரசு, தற்போது மக்கள் பணத்தை இதுபோன்ற ஆடம்பரத் திட்டங்களுக்கு வாரி இறைப்பது எந்த வகையில் ஏற்புடையது என்று கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லைப் பாதுகாக்க தார்ப்பாய் கேட்டால் நிதி இல்லை என்று கூறும் அரசு, சட்டமன்ற உறுப்பினர்களின் வசதிக்காகப் பல கோடிகளைச் செலவழிப்பது முரணானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி எதிர்க்க வேண்டிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் இத்தகைய சலுகைகள் வழங்கப்படுவது அவர்களை விமர்சிக்கவிடாமல் தடுக்கும் மறைமுக நடவடிக்கையோ என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியுள்ளார். மக்கள் வரிப்பணம் இதுபோன்று வீணடிக்கப்படுவதைத் தவிர்த்து, விவசாயிகளின் நலன் மற்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
