LATEST NEWS
இன்னைக்கு சாயங்காலமே அந்த ‘லிஸ்ட்டை’ கொடுக்குறேன்… தயவு செய்து அந்த கடையை நீக்கிடலாம்… சட்டமன்றத்தில் ஆவேசமாக எகிறிய சி.வி.சண்முகதிற்கு அமைச்சர் விக்னேஷ் பதிலடி…!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில், டாஸ்மாக் மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்வது மற்றும் மூடுவது குறித்த விவாதத்தின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. தனது மைலம் தொகுதிக்குட்பட்ட செஞ்சி நகரத்தில் மூடப்பட்ட ஒரு மதுக்கடையை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஜம்போதி கிராம எல்லையில் புதிதாகத் திறந்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக சி.வி.சண்முகம் ஆவேசமாகக் குற்றம் சாட்டினார். அமைச்சர் கொடுத்த விளக்கத்தை மறுத்த அவர், நகரக் கடையைக் கிராமத்திற்கு மாற்றியது தவறு என்றும், ”தயவு செய்து அந்த கடையை நீக்கி விடலாம்” என்றும் அவையில் ஆக்ரோஷமாக வலியுறுத்தினார்.
சி.வி.சண்முகம் இவ்வாறு ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்த நிலையில், குறுக்கிட்டு எழுந்த பாமக எம்.எல்.ஏ கணேஷ்குமார், அந்த ஜம்போதி கிராமம் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிதான் என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், “அந்த மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துத்தான் அந்த இடத்தில் கடை வேண்டாம் என்கின்றனர்; எனவே நீங்கள் அதை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை, அந்தக் கடையை முற்றிலும் மூடிவிடலாம்” என்று சி.வி.சண்முகத்தின் கோரிக்கைக்கு ஆதரவாகவும், மக்கள் நலன் சார்ந்தும் அதிரடி வார்த்தைகளை முன்வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தனது ரியாக்ஷனைப் பதிவிட்டார். மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் அடிப்படையில் தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அமைச்சர், உறுப்பினர்கள் கூறுவது போல் தவறு ஏதேனும் இருக்கும் பட்சத்தில் இந்த அரசு அதனை நிச்சயம் பரிசீலிக்கும் என்று உறுதியளித்தார். மேலும், ஏற்கனவே தமிழகத்தில் 717 மதுக்கடைகளை இந்த அரசு மூடி சாதனை படைத்துள்ளது என்றும், உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதால் மூடப்பட்ட அந்த 717 கடைகளின் முழுப் பட்டியலையும் விலாசத்துடன் இன்னைக்கு சாயங்காலமே கொடுக்கத் தயார் என்றும் கூறி விவாதத்தை சுமுகமாக முடித்து வைத்தார்.
