CRIME
“என் அம்மா முகத்தை பார்க்க பிடிக்கல” அப்பாவை கொன்னுட்டாங்க.. 10 வயது மகனின் சாட்சியத்தால் தாய் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில், தன் கணவனைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், கொலையை நேரில் பார்த்த அவரது 10 வயது சிறுவனின் சாட்சியமே வழக்கின் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட சிறுவனின் தாய் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் உட்பட மொத்தம் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் பின்னணியில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி ஜித்தேந்திர பంజாரா என்பவர் தனது மனைவி பூஜா தனது காதலனுடன் இருப்பதை நேரில் பார்த்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், பூஜாவும் அவரது காதலன் ராகேஷ் குஷ்வா மற்றும் மற்றொரு கூட்டாளி ஈஸ்வர் சிங் ஆகிய மூவரும் சேர்ந்து ஜித்தேந்திராவைத் தாக்கி, தலையில் சுத்தியல் கொண்டு அடித்து, கழுத்தை நெரித்துக் கொன்று உடலைக் குழிக்குள் வீசியுள்ளனர்.
கொலை நடந்த நேரத்தில் வீட்டில் இருந்த ஜித்தேந்திராவின் 10 வயது சிறுவன், தன் கண் எதிரே நடந்த இக்கொடூரச் சம்பவத்தை முழுமையாகப் பார்த்துள்ளான். நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட அந்தச் சிறுவன், தன் தாயைக் கண்டதும் கதறி அழுததுடன், “எனக்கு என் தாயின் முகத்தையே பார்க்கப் பிடிக்கவில்லை, அவர்தான் என் அப்பாவைக் கொன்றார்” என்று நீதிமன்றத்தில் தீர்க்கமாக வாக்குமூலம் அளித்துள்ளான்.
சிறுவனின் இந்த உறுதியான சாட்சியம் மற்றும் காவல்துறையினரின் முறையான ஆவணங்களின் அடிப்படையில், விசாரணை நடத்திய மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மனைவி பூஜா, அவரது காதலன் ராகேஷ் மற்றும் ஈஸ்வர் சிங் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 31,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
