CRIME
“வெறும் ₹300 கொடுத்தால் போதும்…” ஜெராக்ஸ் கடையின் பெயரில் பயங்கர மோசடி.. 36 வயது வாலிபர் கைது.. திடுக்கிடும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஜல்பள்ளியில் ஜெராக்ஸ் கடை என்ற பெயரில் போலி ஆதார் மற்றும் பான் கார்டுகளைத் தயாரித்து வந்த ஒரு கும்பலை சம்சாபாத் மண்டல டாஸ்க் ஃபோர்ஸ் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த மோசடியின் முக்கிய சூத்திரதாரியான ஜெராக்ஸ் கடை உரிமையாளர் சி.எச். மகாதேவ் (36) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து போலி கார்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களைப் பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்றுவதற்கு ரூ.300-ம், பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்ட ஒட்டுமொத்த விவரங்களையும் மாற்றுவதற்கு ரூ.700 முதல் ரூ.1,000 வரை வசூலித்து சட்டவிரோதமாக இந்த மோசடியை அரங்கேற்றி வந்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்தக் கும்பலால் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆதார் மற்றும் பான் கார்டுகளைப் பயன்படுத்திப் பலர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றதும், போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டுகளைப் பெற்றுப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முறைகேடாகப் பெறுவதற்கும் இந்த போலி அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்த நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும், இவர்களிடம் போலி கார்டுகளை வாங்கிய நபர்கள் குறித்தும் சம்சாபாத் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
