தயாரிப்பாளர்கள் நலிவடைவதற்கு இதுதான் காரணம்…கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களின் வேதனை…டிக்கெட் டிரான்ஸ்பரன்ஸி முறையை உடனே கொண்டு வாங்க…முதல்வர் விஜய்யால் மட்டுமே சாத்தியம் என உருகிய தயாரிப்பாளர்…! – cinefeeds
Connect with us

CINEMA

தயாரிப்பாளர்கள் நலிவடைவதற்கு இதுதான் காரணம்…கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களின் வேதனை…டிக்கெட் டிரான்ஸ்பரன்ஸி முறையை உடனே கொண்டு வாங்க…முதல்வர் விஜய்யால் மட்டுமே சாத்தியம் என உருகிய தயாரிப்பாளர்…!

Published

on

சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், ‘மிக மிக அவசரம்’ படத்தின் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, தமிழக முதல்வர் விஜய்யின் புதிய ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் நடைபெற்று வரும் சீர்திருத்தங்களை மனதாரப் பாராட்டியுள்ளார். இதுகுறித்துத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பள்ளிக் கல்வித் துறை, அறநிலையத் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறையில் கொண்டு வரப்பட்டுள்ள சீர்மிகு மாற்றங்கள் உண்மையிலேயே வரவேற்கத்தக்கது என்றும், மக்களைப் பெரும் அவதிக்குள்ளாக்கி வந்த லஞ்ச லாவண்யம் இதன் மூலம் கட்டுப்படும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், அலைக்கழிக்கப்பட்ட மக்களின் இடத்திலிருந்து இதைப் பார்க்கும்போதுதான் இந்த மாற்றங்களின் உண்மையான பயன்களும் வலியும் புரியும் எனக் கூறி, இதற்குக் காரணமான முதல்வர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்குத் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அதே வேளையில், கனவுத் தொழிற்சாலையான சினிமா உலகில் புரையோடிப்போய்க் கிடக்கும் அவலங்களைச் சீர் செய்ய வேண்டும் என்கிற மிக முக்கியமான கோரிக்கையையும் சுரேஷ் காமாட்சி முன்வைத்துள்ளார். திரைப்படத் துறையில் முன்னணி நடிகர்களும் பிரபலங்களும் மட்டுமே செல்வச் செழிப்பாக வாழ்வதையும், மற்றவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காகக் கஷ்டப்படுவதையும் நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். மேலும், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் முதல் தின்பண்டங்கள் மற்றும் பார்க்கிங் கட்டணம் வரை ஏகப்பட்ட பகல் கொள்ளை நடப்பதாகப் பொதுமக்கள் தரப்பிலும் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில், பல வருடங்களாகத் தவித்துக் கொண்டிருக்கும் திரையுலகைக் காப்பாற்ற முதல்வரின் பார்வை இதன் மீது பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

திரைத்துறையில் முக்கியமாக ‘டிக்கெட் டிரான்ஸ்பரன்ஸி’ (Ticket Transparency) எனப்படும் வெளிப்படையான டிக்கெட் விற்பனை முறையையும், திரையரங்குகள் ஒதுக்கீடு முறையையும் உடனடியாகச் சீர் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பல தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துவிட்டு, அதனைத் தியேட்டர்களில் இருந்து மீட்டெடுப்பதில் உள்ள சிக்கல்களால் நலிவடைந்து விடுகிறார்கள் என்றும், வலியையும் வேதனையையும் அனுபவிக்கும் அவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஏற்கனவே புதிய திரைப்படங்கள் வெளியான முதல் 7 நாட்களுக்குக் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு முதல்வர் விஜய் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை நற்பாதைக்குக் கொண்டு செல்லும் இந்த அடுத்தடுத்த கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in