CINEMA
நினைத்ததை செய்து முடித்தார்.. சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்..!
தான் எந்த ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சார்ந்தவர் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ‘சாதி, மதமற்றவர்’ என்ற சான்றிதழ் கோரி பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஒரு வாரத்திற்குள் சான்றிதழ் வழங்கும்படி சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு (Tahsildar) உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, பார்த்திபனிடம் அதிகாரப்பூர்வமாக ‘சாதி, மதமற்றவர்’ என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தச் சான்றிதழைப் பெற்றதன் மூலம், சட்டப்பூர்வமாக சாதி மற்றும் மத அடையாளங்களைத் துறந்த ஒருவராக அவர் மாறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஏற்கனவே சிநேகா-பிரசன்னா தம்பதியினர் தங்கள் மகளுக்கு இது போன்ற சான்றிதழ் பெற்ற நிலையில், தற்போது பார்த்திபன் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளார்.
சான்றிதழ் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், இது போன்ற சான்றிதழ்களைப் பெறுவதற்கு பொதுமக்கள் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். எனவே, மக்கள் எளிதாக இச்சான்றிதழைப் பெற ஏதுவாக அரசு உரிய அரசாணை (Government Order) பிறப்பிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
