CRIME
“முதலில் 500 ரூபாய்.. அப்புறம் மொத்த கட்டு”.. அயோத்தி ராமர் கோவிலில் ஊழியர்கள் செய்த பகீர் காரியம்.. விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்..!!
அயோத்தி ராமர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையில் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை கையாடல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுவின் தீவிர விசாரணையில், அடுத்தடுத்து வெளியாகும் ரகசியங்கள் இந்த மோசடியின் பின்னணியில் உள்ள பெரிய சதியை நோக்கி விரல் நீட்டுகின்றன. காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த 6 ஊழியர்கள், தொடக்கத்தில் ஓரிரு ரூ.500 நோட்டுகளைத் தங்களது உடைகளுக்குள் மறைத்துத் திருட ஆரம்பித்துள்ளனர். பாதுகாப்பு குறைபாடுகளைப் பயன்படுத்தி நாளடைவில் தைரியம் கூடி, பணக்கட்டுகளையே அப்படியே திருடிச் சென்றுள்ளனர். இந்த மோசடி தொடர்பாகப் பலரைச் சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்துள்ளனர். கோயில் அறக்கட்டளைக்கும் எஸ்பிஐ வங்கிக்கும் இடையே பயோமெட்ரிக் வருகை, கட்டாய சீருடை, தீவிர சோதனை மற்றும் முழுமையான சிசிடிவி கண்காணிப்பு போன்ற கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், அவை வெறும் காகிதத்தில் மட்டுமே இருந்துள்ளன.
சிசிடிவி கேமராக்கள் இருந்த கட்டுப்பாட்டு அறையில் பல நேரங்களில் ஊழியர்கள் யாரும் இல்லாததோடு, ஊழியர்களைத் தீவிரமாகச் சோதனை செய்யும் முக்கிய விதிகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மனீஷ் குமார் யாதவ் என்பவர் பரிந்துரையின் பேரில் பணியில் சேர்ந்து, மே 11 முதல் தொடர்ந்து பணத்தைத் திருடியது சிசிடிவி பதிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட ஊழியர்களிடம் இருந்து ரூ.79 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் திருடிய பணத்தின் மூலம் அயோத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சொத்துகள் வாங்கியுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இந்தத் திருட்டு குறித்து முன்கூட்டியே தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற சந்தேகத்தின் பேரில், ராமர் கோயில் அறக்கட்டளையின் முன்னாள் உறுப்பினர் அனில் மிஸ்ராவையும் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப் போலீஸார் முடிவு செய்துள்ளனர். கடுமையான விதிகள் இருந்தும், அதிகாரிகளின் அலட்சியத்தால் இவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
