LATEST NEWS
“உங்களால வீட்ல வச்சு மைலேஜை கண்டுபிடிக்க முடியாது”.. எத்தனால் பெட்ரோல் சர்ச்சைக்கு நிதின் கட்கரி கொடுத்த அதிரடி பதில்..!!
மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, வாகனங்களின் மைலேஜ் குறைவதாக வாகன ஓட்டிகளிடையே பரவலான புகார்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஒரு சாதாரண கார் உரிமையாளரால் தனது காரின் மைலேஜைத் தானாக துல்லியமாகக் கணக்கிட முடியாது என்று தெரிவித்துள்ளார். நீங்களோ, நானோ வீட்டில் இருந்தபடி மைலேஜைச் சரிபார்க்க முடியாது என்றும், வாகன உற்பத்தி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களின் சிறப்புப் பரிசோதனைக் கருவிகள் மூலம் மட்டுமே துல்லியமான மைலேஜை அளவிட முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், பெட்ரோலை விட எத்தனாலின் கலோரிஃபிக் மதிப்பு குறைவு என்பதால், மைலேஜில் சிறிதளவு குறைவு ஏற்படுவது இயல்பானதுதான் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
காரில் கணினி மூலம் காட்டப்படும் மைலேஜ் ஒரு தோராயமான மதிப்பீடே தவிர, 100% துல்லியமானது அல்ல என்றும், சுயமதிப்பீடு என்பது உண்மையான மதிப்பீட்டிலிருந்து 2 முதல் 5 சதவீதம் வரை வேறுபடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் வீட்டிலிருந்தபடியே வாகனத்தின் மைலேஜை 100% துல்லியமாகச் சரிபார்க்க முடியாது என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும், கார் ஓட்டிகள் பொதுவாகப் பயன்படுத்தும் ‘ஃபுல் டேங்க்’ (Full Tank) முறை, அதாவது டேங்கை முழுமையாக நிரப்பி, பயணித்த கிலோமீட்டரைக் கணக்கிடும் வழிமுறையானது, ஓரளவிற்கு நிஜமான மைலேஜ் விபரத்தைத் தரும் என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
