LATEST NEWS
அட என்ன சொல்லுறீங்க..! தலையைத் திறக்காமல் மூளை அறுவை சிகிச்சை… அதுவும் மூக்கு வழியாவா..? இந்திய வம்சாவளி மருத்துவரின் வரலாற்றுச் சாதனை..!!
மண்டையோட்டைத் திறக்காமலேயே மூக்கு வழியாகச் சென்று மூளைக் கட்டிகளை அகற்றும் புதுமையான அறுவை சிகிச்சை முறையை இந்திய-அமெரிக்க ராணுவ அறுவை சிகிச்சை நிபுணரான மேஜர் ஜகத்குமார் படேல் மற்றும் லெப்டினன்ட் கர்னல் சார்லஸ் மில்லர் ஆகியோர் இணைந்து வெற்றிகரமாகச் செய்துள்ளனர். வழக்கமாகச் செய்யப்படும் திறந்தநிலை அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு மிகுந்த சவாலாக இருக்கும் நிலையில், கட்டியின் அளவு மற்றும் இடம் சரியானதாக இருக்கும் பட்சத்தில், மூக்கு வழியாக எண்டோஸ்கோபிக் கேமராவைப் பயன்படுத்தி குறைந்தபட்ச பாதிப்புடன் கட்டியை முழுமையாக அகற்ற முடியும் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர்.
சமீபத்தில் 15 ஆண்டுகளாகத் தாங்க முடியாத தலைவலியாலும் பார்வைக் கோளாறாலும் அவதிப்பட்டு வந்த அமெரிக்க மரைன் படைவீரர் ஆண்டி ஆர்ச்சர் என்பவருக்கு இந்த முறை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகே பார்வை நரம்பை அழுத்தியபடி இருந்த 4.4 செ.மீ அளவுள்ள கோல்ஃப் பந்து போன்ற கட்டியை, பெதஸ்தாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் படேல் மற்றும் மில்லர் இணைந்து மூக்கு வழியாகப் பாதுகாப்பாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
இந்த நவீன அணுகுமுறையின் காரணமாக, அறுவை சிகிச்சை முடிந்த இரண்டே நாட்களில் நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் எழுந்து உட்காரும் அளவுக்கு விரைவாகக் குணமடைந்துள்ளார். மேலும் அவரது பார்வையும் தெளிவடைந்துள்ளது. “பாதுகாப்பு சுகாதார முகமையில் இத்தகைய சிக்கலான மண்டை ஓட்டு அடிப்பகுதி அறுவை சிகிச்சைகளைச் செய்யும் இதுபோன்ற ஒரு சிறப்புக் குழு வேறு எங்கும் இல்லை” என்று தெரிவித்துள்ள மேஜர் படேல், இது ஒரு கூட்டு முயற்சியின் வெற்றி என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
