LATEST NEWS
திக் திக் காட்சி..! “வெறும் 20 நிமிடங்களில் 7 பயங்கர வெடிப்புகள்” ஈரானியப் போர் பதற்றத்திற்கு மத்தியில் துபாயில் நடந்த சம்பவம்… உலக அளவில் பரபரப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஜெபல் அலி தொழில்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து பல சக்திவாய்ந்த வெடிவிபத்துகள் ஏற்பட்டுள்ள சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அதிகாலை நேரத்தின்போது, வெறும் 20 நிமிட இடைவெளிக்குள் அடுத்தடுத்து சுமார் 7 வெடிச்சத்தங்கள் கேட்டதாக அதிகாரிகள் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்துகளைத் தொடர்ந்து அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே வானை முட்டும் அளவிற்கு அடர்ந்த கரும்புகையும் பிரம்மாண்ட தீப்பிழம்புகளும் உருவானதை உள்ளூர் மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த விபத்து தற்செயலாக நடந்த தொழில்துறை விபத்தா அல்லது ஏதேனும் ஏவுகணைத் தாக்குதலா என்பது குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் தான் இதற்குக் காரணம் என சில ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், துபாய் ஊடகத் துறை வெளியிட்டுள்ள முதற்கட்ட விளக்கத்தில், ஜெபல் அலி பகுதியில் உள்ள ஒரு தொழிற்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே அங்கிருந்த லாரிகள் தீப்பற்றி இந்த வெடிவிபத்துகள் நேரிட்டதாகத் தெரிவித்துள்ளது. நாசாவின் வெப்ப இமேஜரி தரவுகளும் துறைமுகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதை சுட்டிக்காட்டுகின்றன.
இந்த பயங்கர வெடிவிபத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், இந்த விபத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றத்திற்காக இரண்டு நபர்களை அமீரகப் போலீசார் கைது செய்துள்ளனர். உலகளாவிய வர்த்தக மையமாகவும், அமெரிக்க கடற்படையின் முக்கிய தளமாகவும் விளங்கும் ஜெபல் அலி துறைமுகப் பகுதியில் இத்தகைய விபத்து நேரிட்டுள்ளது அரபு நாடுகளிடையே பெரும் பாதுகாப்புப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
