LATEST NEWS
“கட்சியில இருந்து தூக்கினா அவரு தப்பிச்சுடுவாரு” அதை வைத்து சி.வி.சண்முகம் ஆடும் அரசியல் கேம்… ‘செக்’ வைக்க எடப்பாடி பழனிசாமி போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்… உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல்..!!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தைத் தொடர்ந்து, அதிமுகவுக்குள் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டைக் கிளப்பியுள்ளது. தவெக ஆட்சி அமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நகர்வால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கட்சியில் இரு வேறு அணிகள் உருவாகி, போட்டி அணிகளாகச் செயல்படத் தொடங்கிவிட்டன.
இதனையடுத்துத் தனக்கு எதிராகச் செயல்பட்ட முக்கிய நிர்வாகிகள் மீது எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், பதவி பறிக்கப்பட்ட சி.வி.சண்முகம் ஓய்ந்தபாடில்லை. தொடர்ந்து இபிஎஸ்ஸை காரசாரமாக விமர்சித்து வரும் அவர், பொதுக்குழுவைக் கூட்டித் தனது ஆதரவை நிரூபித்துக் காட்டுமாறு பகிரங்கச் சவால் விடுத்து வருகிறார். இந்த நிலையில், சி.வி.சண்முகத்தை ஏன் இன்னும் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கவில்லை என்று எடப்பாடி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி, உடனடியாக நீக்க வலியுறுத்தி வந்தாலும், இபிஎஸ் தரப்பு மிகவும் நிதானமாகவே காய்களை நகர்த்தி வருகிறது.
சி.வி.சண்முகத்தைக் கட்சியிலிருந்து நீக்கும்பட்சத்தில், அவர் ‘கட்சியால் நீக்கப்பட்டவர்’ என்ற அந்தஸ்தைப் பெற்றுவிடுவார். இதனால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் சட்டச் சிக்கல்கள் எழக்கூடும் என்பதால், அவர் தனது எம்.எல்.ஏ பதவியைப் பத்திரமாகத் தக்கவைத்துக்கொண்டு தவெக அரசில் இணையும் வாய்ப்பு உருவாகிவிடும் என்று இபிஎஸ் கணக்கிடுகிறார். இதனால் சி.வி.சண்முகத்தைச் சட்டரீதியாக எப்படிச் சிக்குவகை செய்வது என்பது குறித்து அடுத்தகட்ட ஆலோசனைகளில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
