CRIME
“மயங்கி விழுந்துட்டா… மனைவியை குக்கர் மூடியால் அடித்து கொடூரமாக கொன்று… மருத்துவமனையில் நாடகமாடிய கணவன்..!” எஸ்.பி நடத்திய விசாரணையில் அம்பலமான உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பதேப்பூர் மாவட்டத்தின் கொத்வாலி நகர் பகுதியில், சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஷாலினி யாதவ் என்ற பெண் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், அரசுப் பள்ளி ஆசிரியரான அவரது கணவர் திலீப் குமார் மனைவியைக் கொலை செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தம்பதியிடையே நீண்டநாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்ததால், மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்ட திலீப் குமார், சாட்சிகள் யாரும் இல்லாதவாறு தங்களது 7-8 வயது சிறுவனை முதலில் மாமியார் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து இந்தச் சதியை அரங்கேற்றியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி அதிகாலை சுமார் 5:15 மணியளவில், ஷாலினி வீட்டின் முற்றத்தில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது, திலீப் குமார் பின்புறமாக வந்து கனமான அலுமினிய குக்கர் மூடியால் அவரது தலையில் 3 முறை பலமாகத் தாக்கியுள்ளார். இதில் ஷாலினி இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அதன்பின்னரும், மயக்கமடைந்த மனைவியை தூக்கிச் சென்று தண்ணீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாத் டப்பில் போட்டு, அவரது மூச்சு அடங்கும் வரை கழுத்தைத் தண்ணீருக்குள் அமுக்கிக் கொடூரமாகக் கொன்றுள்ளார்.
கொலைக்குப் பிறகு, ஆதாரங்களை அழிப்பதற்காக பாத் டப்பில் இருந்த இரத்தக் கறை படிந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு, எதுவும் நடவாதது போல மோட்டார் சைக்கிளில் ‘மார்னிங் வாக்’ செல்வது போல் சென்று நாடகமாடியுள்ளார். பின்னர் வீடு திரும்பி, தனது சகோதரர்களை அழைத்து ஷாலினி மயங்கி விழுந்து காயம் அடைந்துவிட்டதாகப் பொய் கூறி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதுகுறித்து ஷாலினியின் தந்தை அளித்த புகாரின் பேரில், காவல் கண்காணிப்பாளர் அபிமன்யு மாங்ளிக் வழிகாட்டுதலில் விசாரணை நடத்திய காவல்துறை கணவர் திலீப் குமாரைக் கைது செய்தது. அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட குக்கர் மூடி, பிளாஸ்டிக் பாத் டப், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
