CRIME
நள்ளிரவில் தாய்க்கு வந்த அந்த ஒரு ‘வாட்ஸ்அப் மெசேஜ்’.. வீட்டைத் திறந்து பார்த்த உரிமையாளருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… ஐடி ஊழியர் தம்பதிகள் கிடந்த கோலம்.. பெங்களூருவை உலுக்கிய சோகம்..!!
பெங்களூரு ராஜகோபால் நகர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரான சுமாந்த் ஜெயின் மற்றும் பத்மாவதி ஆகியோர் அவர்களது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். சுமாந்த் ஜெயின் ஒரு சிவில் பொறியாளராகவும், பத்மாவதி ஒரு மென்பொருள் பொறியாளராகவும் பணியாற்றி வந்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, குடும்பத் தகராறு காரணமாக இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் இந்தத் துயரமான சம்பவத்திற்கு வழிவகுத்ததாகத் தெரிகிறது.
கடந்த புதன்கிழமை இரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், சுமாந்த் ஜெயின் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. உயிரிழப்பதற்கு முன்னதாக சுமாந்த் தனது தாயாருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாயார், வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்துள்ளார்.
வீட்டின் உரிமையாளர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, இருவரும் உயிரிழந்த நிலையில் இருப்பதை உறுதி செய்தார். தகவலறிந்து வந்த ராஜகோபால் நகர் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழப்பிற்கான துல்லியமான காரணங்கள் மற்றும் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
