CRIME
“நான் இல்லாத நேரத்துல எவன் கூட பேசுற..?” எந்நேரமும் ஒரே சந்தேகம்… காவல்நிலையம் சென்ற மனைவியின் கழுத்தை நடுரோட்டில் அறுத்த கணவன்… கிருஷ்ணகிரியை உலுக்கிய சம்பவம்…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த ஓந்தியம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய மாதேஷ்வரி என்பவரை, அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் ஏழுமலை நடுரோட்டில் வைத்து கத்தியால் வெட்டிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான ஏழுமலை, “நான் இல்லாத போது எவன் கூட பேசுற” என்று கூறி கடந்த ஆகஸ்ட் 11 அன்று மனைவியைத் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த மாதேஷ்வரி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் இருவரையும் ஆகஸ்ட் 13 மாலை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
இதையடுத்து மாதேஷ்வரி தனது இரு மகன்கள் மற்றும் தாயாருடன் இருசக்கர வாகனத்தில் காவல் நிலையம் நோக்கிச் சென்றபோது, கணவர் ஏழுமலை தங்களைப் பின்தொடர்வதாகவும், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் செல்போன் மூலம் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் போலீசாரோ உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக, “வேகமாக காவல் நிலையத்திற்கு வந்துவிடுங்கள்” என்று கூறியதாகத் தெரிகிறது. அவர்கள் முருகன் கோவில் அருகே சென்றபோது, ஏழுமலை திடீரென வழிமறித்துத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாதேஷ்வரியின் கழுத்து மற்றும் மார்பில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினார்.
தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், படுகாயமடைந்த மாதேஷ்வரியை மீட்டு தீவிர சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஏழுமலையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், ஆபத்து என்று முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் போலீசார் ஏன் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோணத்திலும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
