CRIME
“என் பொண்ணு வாழ்க்கைய சீரழிக்காதே…” போலீசில் புகார் அளித்தும் அடங்காத ஆத்திரம்.! இளம்பெண்ணின் தந்தையை பழிவாங்கிய கொடூர வாலிபர்..! தெலுங்கானாவில் பதறவைக்கும் சம்பவம்..!!
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு தந்தைக்கு நேர்ந்த சோகமும், அதன் பின்னணியில் உள்ள கொடூரமும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த வாலிபரைத் தட்டிக் கேட்டதற்காக, ஒரு தந்தை மீது வாலிபர் கத்தியால் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளார். தெலுங்கானா மாநிலம் தும்முகுடெம் பகுதியில் வசித்து வரும் கௌரவர்பு நரசிம்ம ராவ் என்பவரின் மகளை, அதே பகுதியைச் சேர்ந்த உப்படா ஹர்ஷித் ரெட்டி என்ற வாலிபர் தொடர்ந்து தொல்லைப்படுத்தி வந்துள்ளான். அதுமட்டுமின்றி, பெண்ணின் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மிரட்டியதால், குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த வாலிபரை அழைத்து கடுமையான எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.
காவல்துறையினர் தன்னை எச்சரித்ததை மனதில் வைத்து நரசிம்ம ராவ் மீது ஆத்திரத்தை வளர்த்துக்கொண்ட ஹர்ஷித் ரெட்டி, எப்படியாவது பலிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளான். அதன்படி, நரசிம்ம ராவை வழிமறித்த அந்த வாலிபர் திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர் மீது பலத்த தாக்குதல் நடத்தியுள்ளான். இந்தத் தாக்குதலில் நரசிம்ம ராவின் இடது தோள்பட்டையில் ஆழமான காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதால், அவர் அங்கேயே மயங்கிச் சரிந்து விழுந்தார்.
உடனடியாகக் குடும்பத்தினரும் பொதுமக்களும் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலுக்குப் பிறகு சமூக வலைத்தளத்தில் மீண்டும் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுவிட்டுத் தலைமறைவான அந்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தந்தையைக் காப்பாற்ற முயன்று போராடும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
