LATEST NEWS
விவசாயியிடம் இருந்து நிலத்தை பிடுங்குவது “குழந்தையிடம் இருந்து தாயை பிடுங்குவதற்கு சமம்”.. கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் நிலை என்ன..? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்..!!
சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன், விவசாயியிடம் இருந்து நிலத்தை எடுப்பது குழந்தையிடமிருந்து தாயைப் பிரிப்பது போன்றது என்று உருக்கமாகத் தெரிவித்தார். உலகிலுள்ள பல பெரிய வன்முறைகள் ‘வளர்ச்சி’ என்ற வார்த்தையின் மூலமாகவே தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நமக்கு நிலையான வளர்ச்சிதான் முக்கியம் என்றும், தமிழகத்திற்கு விமான நிலையமும் வேண்டும், அதே நேரத்தில் விவசாய நிலமும் வேண்டும் என்றும் சமரசமற்ற தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, விவசாய நிலங்களுக்கும் நீர்நிலைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாகச் சட்டப்பேரவையில் அண்மையில் 110-வது விதியின் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சுற்றுச்சூழல் சங்கிலியாக விளங்கும் ‘கம்பன் கால்வாய்’ அமைந்துள்ள பகுதியில் விமான நிலையம் அமைக்க முடியாது என்பதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாகவும், மாற்றுப் பாதையில் புதிய விமான நிலையத்திற்கான இடத்தை அரசு தேடி வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பரந்தூரில் முந்தைய அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் விவசாயிகளுக்கே மீண்டும் திருப்பித் தரப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே, இது குறித்து சட்ட வல்லுநர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடனும் விரிவாகக் கலந்தாலோசித்து, விவசாயிகளுக்கு முற்றிலும் சாதகமான ஒரு நல்ல முடிவு விரைவில் சுமூகமாக எடுக்கப்படும் என்று கூறி உறுதியளித்தார்.
