LATEST NEWS
டெல்லிக்கு பறந்த வீட்டு மசாலா பொடி பார்சல்… அமித் ஷாவுடன் நெருங்கும் CM விஜய்..? சந்திப்புக்கு பின் தவெக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ ஆர்டர்..!!
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற அரசு, மத்திய அரசுடன் எத்தகைய அரசியல் உறவைக் கையாளப் போகிறது என்ற கேள்விக்கு விடை கொடுக்கும் வகையில் தற்போதைய நகர்வுகள் அமைந்துள்ளன. மாநில நலன்களை முன்வைத்து, டெல்லியோடு வீண் மோதல் போக்கைத் தவிர்த்து நிர்வாக ரீதியான சுமுக உறவைப் பேணுவதில் முதலமைச்சர் விஜய் மிகுந்த முனைப்பு காட்டி வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டிற்காக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பின்போது, தமிழகத்தின் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட வீட்டு மசாலாப் பொடிகளை அமித் ஷாவிற்கு அவர் பரிசாக வழங்கினார். இத்தகைய தனிப்பட்ட அன்புப் பரிமாற்றம், இரு தலைவர்களுக்கும் இடையே உருவாகி வரும் இணக்கமான சூழலை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
மத்திய அரசுடன் நிலவும் இந்த நல்லுறவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். இதன் வெளிப்பாடாக, சமீபத்திய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா குறித்துப் பேசிய கடுமையான விமர்சனங்களை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனடியாகத் தலையிட்டு அவைக் குறிப்பில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்தார். மத்திய தலைவர்கள் மீதான தாக்குதலை பேரவையில் அனுமதிப்பதில்லை என்ற அரசின் இந்த நிலைப்பாடு கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும், மத்திய அரசையோ அல்லது அதன் தலைவர்களையோ தேவையின்றி அரசியல் ரீதியாகத் தாக்கக் கூடாது எனத் தனது அமைச்சரவை சகாக்களுக்கு முதலமைச்சர் திட்டவட்டமான உத்தரவிட்டுள்ளார். “மத்திய அரசிடம் மாநிலத்திற்கான கோரிக்கைகளை உறுதியாக வையுங்கள்; ஆனால் தேவையின்றி விமர்சிக்க வேண்டாம். நெருக்கமான உறவைப் பேணி மாநிலத்திற்குத் தேவையான நல்ல திட்டங்களைப் பெற்றுத் தருவதே முக்கியம்” என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முந்தைய காலங்களைப் போல அரசியல் முரண்களுக்காக மத்திய அரசுடன் தொடர் மோதலில் ஈடுபடுவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடைப்பைய ஏற்படுத்தும் என்பதே இந்த வியூகத்தின் பின்னணியாகும். கொள்கை ரீதியான வேறுபாடுகளைத் தாண்டி, நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களுக்கான ஒப்புதல்களைப் பெற டெல்லியுடன் சுமுகமான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ள விஜய்யின் இந்த புதிய அணுகுமுறை தமிழக அரசியலில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
