LATEST NEWS
“எங்கெல்லாம் வழி கிடைத்ததோ.. அங்கெல்லாம் தப்பி ஓடினோம்…” இன்னமும் காடுகளுக்குள்ளயும் சுரங்கப்பாதைக்குள்ளயும் பல தொழிலாளர்கள் உதவிக்காகக் கதறிக்கிட்டு இருக்காங்க… நேபாள வெள்ள பேரழிவில் தப்பிய இளைஞர் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் என்ற ரோஷன் சிங், நேபாளத்தில் ஏற்பட்ட கொடூர வெள்ளப் பெருக்கின் பயங்கரமான நேரில் கண்ட காட்சிகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இவர் நேபாளத்தில் மின் விநியோகம், நீர்மின் திட்டம் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளும் ‘துண்டி குரூப்’ நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். திரிசூலி பகுதியில் பணி தொடங்கவிருந்த சமயத்தில் திடீரென மலையிலிருந்து பெரும் வெள்ளப்பெருக்கு சீறிப் பாய்ந்து வந்தது. நிர்வாகம் எச்சரிக்கை விடுப்பதற்குள் நீர் அதிவேகமாக வந்ததால், திரிசூலி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பேரழிவாக மாறியது.
இந்த இயற்கைச் சீற்றத்தின் போது, உயிர் பிழைப்பதற்காக தொழிலாளர்கள் மலைகளை நோக்கி ஓடினர்; யாருக்கு எங்கு வழி கிடைத்ததோ அங்கு தப்பியோடினர். இருப்பினும், ரோஷனின் 9 சக தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் வெள்ளத்தின் உயரமான அலைகளில் அடித்துச் செல்லப்பட்டனர். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வீட்டிற்குச் சென்று சகோதரிகளிடம் ராக்கி கட்டிக் கொள்ளத் திட்டமிட்டிருந்த ரோஷனுக்கு, இந்தத் திடீர் அசம்பாவிதம் ஆறாத் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திரிசூலியில் பணிபுரிந்த பல தொழிலாளர்களின் நிலைமை குறித்து இன்னும் எந்தத் தகவலும் தெரியவில்லை; பலரைக் காணவில்லை என ரோஷன் தெரிவித்தார். இடிபாடுகளுக்கு அடியிலும், சுரங்கப் பாதைகளிலும், காடுகளுக்குள்ளும் இன்னும் பல தொழிலாளர்கள் உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது சிலர் பாலம் மீது நின்று வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததாகவும், அவர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகவும் அவர் வேதனையுடன் கூறினார்.
