LATEST NEWS
“கடவுள் தான் காப்பாற்றினார்… வெள்ளம் எனக்கு வெறும் 100 மீட்டர் தூரத்தில்தான் இருந்தது…” நேபாளத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கி… உயிருடன் மீண்ட இந்திய யாத்ரீகர் பகிர்ந்த பகீர் அனுபவம்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரக்கூடிய திடீர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட இந்திய யாத்ரீகர் ஒருவர், வெள்ளம் தனக்கு வெறும் 100 மீட்டர் தொலைவில் வந்ததாகவும், கடவுளின் அருளால் தான் உயிர் தப்பியதாகவும் தனது பயங்கர அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். கயிலாய மானசரோவர் யாத்திரை சென்ற 21 இந்திய யாத்ரீகர்களை நேபாள ராணுவம் வெற்றிகரமாக மீட்டு காத்மாண்டு வழியாக புதுடெல்லிக்கு அனுப்பி வைத்தது. டெல்லிக்கு பத்திரமாக திரும்புவதற்கு உதவி செய்த இந்திய தூதரகத்திற்கும், தங்களை மீட்ட நேபாள ராணுவத்திற்கும் யாத்ரீகர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
மீட்கப்பட்ட யாத்ரீகர்களில் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் ANI செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சுமார் 250 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். வெள்ளம் எனக்கு வெறும் 100 மீட்டர் தூரத்தில்தான் இருந்தது. கடவுள் தான் என்னைக் காப்பாற்றினார். இப்போது நான் பாதுகாப்பாக திரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கடினமான காலத்தில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் எனது தொகுதி எம்.எல்.ஏ ஆகியோர் என்னிடம் பேசி ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள்” என்று கூறினார். மேலும், ஆந்திராவின் திருப்பதியிலிருந்து புறப்பட்ட 26 பேர் கொண்ட குழுவில், உள்ளூர்வாசிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் வாகனத்தைத் திருப்பியதாலும், தேனீர் அருந்த நின்றதாலும் வெள்ளத்தில் சிக்காமல் நூலிழையில் தப்பியதாக மற்றுமொரு யாத்ரீகர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி வந்தடைந்த யாத்ரீகர்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் நேரில் சந்தித்துப் பேசி, அவர்கள் பாதுகாப்பாக திரும்பியதற்கு நிம்மதி வெளியிட்டார். நேபாள வெள்ளப் பகுதியில் இருந்து இதுவரை சுமார் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 315-க்கும் மேற்பட்ட இந்தியர்களைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை இந்திய அரசு விமானம் மூலம் அனுப்பி உதவி வருகிறது.
